டிப்பு டிப்பு டிப்பு குமாரு

மார்ச் 26, 2007

எல்லாரும் காப்பி குடிச்சிருப்பீங்க, இல்ல டீ குடிச்சிருப்பீங்க. காப்பியிலே எத்தனெயோ வகையிருந்தாலும் மசாலா காப்பின்னு ஒண்ணு இருக்கா?

ஆனா டீ யிலே இருக்கே. அந்த மசாலா டீ குடிச்சிருக்கீங்களா. நம்மளுக்கும் மசாலா டீ விருப்பமான ஒண்ணுதான்.

போன் வருஷம் இந்தியா போயிச்சேந்த மூணாவது நாளு
தங்கமணியும் நானும் கடைமேயக் கிளம்பினோம்.

சென்னை அண்ணா நகர்லே புதுசா “வேவ்ஸ்” அப்படின்னு ஒரு ரெடிமேட் கடை திறந்திருக்காங்க. “அருமையான கலைக்ஷன்”னு எங்க மதனி சொல்ல ஆட்டோவை அங்க விடச்சொன்னோம்.

மூணு மாடியும் ஏறி வாங்கு வாங்குன்னு வாங்குச்சு தங்கமணி. அட்டைய கிழிச்சிட்டு ஒரு சில துணிகளை அளவு சரி செய்ய குடுத்துட்டு இருந்தோம்.
அங்கியே “காப்பி இல்ல டீ குடிக்கறீங்களா”ன்னு கேட்டாங்க. நாங்க “வேண்டாம்”ன்னு சொல்லிட்டு, ஒரு “அரைமணியிலே வந்திர்ரோம்”ன்னு வெளியே கிளம்பினோம்.

எதுத்த மாதிரி கொஞ்ச தூரத்துல வசந்தபவனோ ஆரிய பவனோ சரியா ஞாபகம் வர்லீங்க.ஆனா அங்க போயி காப்பி குடிக்கலாமுன்னு நடந்தோம்.

பக்கத்துலேயே கண்ணுலெ பட்டது “coffe day” , அந்தக்காலத்துல தங்கமணிக்கு “coffee day” முட்டாயி நெறைய வாங்கி குடுத்திருக்கேன். அந்த ஞாபகத்திலே இங்க போலான்னு நான் சொல்ல, தங்கமணி தலைய ஆட்டுச்சு.

உள்ற போயி ரெண்டு சீட்டு புடிச்சு உக்காந்தா சுத்தி ஒரே பீட்டருங்களும் ஹேரிகளும் ஜே.லோக்களும் கடலை போட்டிட்டிருந்தாங்க.

நம்மளும் அலோன்ஸோவும் பினாலோப் குருஸாவும் மாறி எஸ்பான்யோல்ல பினாத்திகிட்டிருந்தோம்.(ஹி ஹி).

ஆர்டர் எடுக்க வந்தாரு ஒரு பீட்டரு, நான் வழக்கம்போல் ” கப்பூசினோ வேணுமா”ன்னு தங்கமணிகிட்ட கேக்க, தங்கமணி “மசாலா டீ குடிக்கலாங்க. இந்தியாவுலதான் இதெல்லாம் கிடைக்கும்”ன்னு சொல்ல, நானும் சப்பு கொட்டிட்டு ,”சரி”ன்னு “ரெண்டு மசாலா டீ, ரெண்டு சிக்கன் பப்ஸ்” ஆர்டர் குடுத்தேன்.

கொஞ்ச நேரத்துலே வந்துங்க, ரெண்டு கப்பு, ஒரு குடுவையிலே சுடுதண்ணி, கொஞ்சூண்டு பால், ரெண்டு dip dip ,அவ்வளவுதாங்க. “சக்கரை வேணுமா இல்ல sweetner வேணுமா”ன்னு வேற கேட்டாரு பீட்டரு.

“சக்கரை வேணு”முன்னு சொல்லிட்டு,” மசாலா டீ கேட்டேன்,டிப்பு டிப்பு தர்ரீங்களே”ன்னு கேட்டேன்.ஒரு மாதிரியா பாத்துட்டு “இதான்யா அது”ங்கறான்.

“சுடுதண்ணிலே டிப்பு டிப்பூ போட்டா மசாலா டீ ஆயிருமா, பால கொதிக்க வெச்சு, அதுலே டீ, இஞ்சி, ஏலக்கா, கொஞ்சமா வெள்ள மிளகுத்தூள் இதெல்லாம் போட வேண்டமா” ன்னு யோசிச்சுகிட்டே குடுத்த கருமத்தை குடிச்சா தங்கமணி GEM ஆயிருச்சுங்க.
(G.E.M – Ginger Eaten Monkey).

சரி, பப்ஸ் எங்கய்யான்னு கேட்டேன், இதோ தயாராகிட்டு இருக்கு சார்ன்னு சொன்னாரு பீட்டரு. ஸ்பெசலா தயாராகுதோன்னு மெல்லமா எட்டிப்பாத்தா
அப்பத்தான் ஷோகேஸ்ல இருந்து எடுத்து “மைக்ரோவேவ்” ல சூடு செய்யுராரு பீட்டரு.

“போய்யா! நீயும் உன்னோட பப்ஸூம்” ன்னுட்டு, பில்லக்கட்டிட்டு நடையக்கட்டுனோம் நானும் தங்கமணியும்.

அதுக்கப்புறம் மறந்துகூட் அந்தப்பக்கம் போகவேயில்ல.
பேசாமா முக்குல இருக்குற சேட்டன் கடையிலே டீயும் கிழங்கு போண்டா சாப்டா கூட ந்ல்லாயிக்கும்னு பேசிக்கிட்டோம்


கான்ஸ்டான்டிநோபிளாம்

மார்ச் 25, 2007

இதோ அதோன்னு ஒரு வாரம் ஆகிப்போச்சுது
நிசமாவே நம்ம தமிழ்மணம் வாசகர்கள் அஹிம்சாவாதிகள்தான்.

ஏதொ ஒன்று எழுத ஆரம்பித்து ஏதோவென்றில் முடிந்தது.
இன்று காலையில் பார்த்தால் அபிஅப்பா வேறு கொசுவத்தி சுத்தி இருந்தார்.

சரி நம்மளும் மூக்கை தீட்டிட்டு மூக்கை நீட்டிறலாமுன்னு பாத்து, இதோ.

L.K.G / U.K.G- டென்னிசன் பிரைமரி ஸ்கூல்
வாத்தியாரு பேரு அதேதான், எனக்கு ரெண்டு வயசுலிருந்து நாலு வயசு வரைக்கும் இவர்கிட்டதான்.வீட்டுக்கு பக்கத்துலே இருந்ததால்
ரொம்ப வசதியா இருந்ததாம்.

ஒன்றாம் வகுப்பு : மேரி டீச்சர் , உயரமா அழகா இருப்பாங்க.

ரெண்டாம் வகுப்பு : ரோஸி டீச்சர், கிரிஸ்டினான்னு இவுங்க அக்கா பொண்ணும் எங்கூட படிச்சதுலெ நல்ல ஞாபகம் இருக்குது.

மூணாம் வகுப்பு: இராணி டீச்சர் : குட்டையா இருப்பாங்க. சாந்தின்னு அவுங்க பொண்ணு எஙகூட படித்தது. தனியா பாத்து மருமகனேன்னு கூப்புடுவாங்க.அப்பெல்லாம் அதுக்கு அர்த்தம் தெரியாது. கல்லூரி செல்லும்போது அவர்களையும் அவர் மகளையும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்த பொழுது “மருமகனை” ஞாகபப்படுத்திய பொழுது
அதிகம் வெட்கப்பட்டட்து அவருடைய மகளை விட அவர்தான்.

நாலாம் வகுப்பு : ஜோஸ்பின் டீச்சர் , அவருடைய மகள் அனிட்டா , என்னை விட ஒரு வயது இளையவர்.

ஐந்தாம் வகுப்பு : ஆகத்தா டீச்சர், என்னுடைய விருப்பத்தோழி,லில்லியின் தாயார்.(நான் பத்தாவது படிக்கும்போது கேன்சர் வந்து இறந்தார்).

ஆக மொத்தம் எல்லா டீச்சருக்கும் மகள்கள்தான் இருந்தாங்க.பெருசு இதெல்லாம் ஓவரு.அடங்குன்றீங்க. சரி சரி.

ஆறாம் வகுப்பு :பள்ளி மாறியதில் வேலுச்சாமி வாத்தியார்.என் தந்தையாரின் நண்பர் ஆகையால்,மிக நன்றாக் பழகுவார்.வீட்டிற்கும் வந்து செல்வார்.

ஏழாம் வகுப்பு : ரங்கசாமி வாத்தியார் (ஸொண்டி என்று பட்டப்பெயர்)
நாங்கள்லாம் பெருசாயிடெமில்ல, பட்டப்பேரு வெக்க ஆரம்பிச்சுட்டோம்.

எட்டாம் வகுப்பு : சரசுவதி டீச்சர், ஆறாம் வகுப்பு வேலுச்சாமி வாத்தியாரின்
இல்லத்தரசி. (கூளச்சி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு).

ஒன்பதாம் வகுப்பு : கந்தசாமி வாத்தியார். செம அடி. பட்டையக் கிளப்பிருவாரு.இவருக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லா வார்த்தைகளுடன்
ம் சேர்த்து பேசுவாம்.

“என்னம்,சொல்லும்,பாரும்.”இப்படி பேசுவார் என்று தெரிந்திருந்தும் ஒரு முறை வரலாறு பாடம் நடத்தும்போது “constantinoble”என்பதை “கான்ஸ்டான்டிநோபிளாம்” என்று சொன்னார்.

கேள்வி பதில் நேரத்தில் என் முறை வந்தபோது அவர் சொன்னது போலவே
“கான்ஸ்டாநன்டிநோபிளாம்”என்று பதிலளித்த போது விட்ட அறை இன்னமும் ரொய்ங்க் என்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.அடுத்த நாளே அவருகிட்ட டியூசன் கிளாஸ் சேந்துட்டமில்ல.

பத்தாம் வகுப்பு : உதவித்தலைமை ஆசிரியர் இலட்சுமண வாத்தியார்.
இவர்கிட்டவும் டியூசன் படிச்சோமுல்ல.

மேலும் பல பாடங்கள் சொல்லிக்கொடுத்த தேவகி டீச்சர்,கிருஷ்னண் வாத்தியார், லாஜிக்கலி ராஜேந்திரன் வாத்தியார்,ஹிந்தி டீச்சர் குமாரி அம்முக்குட்டி,உடற்பயிற்சி ஆசிரியர் பொன்னுச்சாமி,என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் இராமசாமி, ஓய்வு பெறும் காலத்திலும் களைப்படையாது
பேட்மிண்ட்டன் விளையாடி தமிழாசிரியர் நடேச வாத்தியார்,தலைமை ஆசிரியர் நடராஜன் என்னும் கட்டையன் எல்லோர்ரையும் நினைவு கூர்கிறேன்.

உயர்கல்வி படிக்கும் போது (அதெல்லாம் படிச்சியா பெருசு)தலையில் இரண்டுகொம்பு முளைத்து விட்டதால் அந்த ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகள் எதுவும் கேட்டவில்லை.ஆனால் அவர்கள் அனைவரும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்

ஆசிரியர்களை நினைவுபடுத்திய இந்தப்பதிவை அவர்களுக்கே சமர்ப்பித்து,
இப்பதிவை படிக்கும் நீங்கள் எல்லாரும் ஆசிரியர்களே, ஏனென்றால் தினமும்
உங்களிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதானிருக்கிறேன்.

வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.


அம்மா அப்பா விளையாட்டு

மார்ச் 25, 2007

சிறு வயதில் அக்கம்பக்கத்து சிறார்களுடன் ,சிற்சில சமயங்களில் பெரியவர்களின் துணையுடன் தத்தம் தாய்தந்தையரை நினைவில் கொண்டு அவர்களைப் போலவே கற்பனையாக பலப்பல செயல்களை
நினைவுபடுத்தி விளையாடியிருப்போம்.

ஆனால் ஒரு பருவத்தை கடந்த பின் அந்த விளையாட்டுகளை நினைவு கூர்ந்தால் சிறுபிள்ளைத்தனமாகத்தானே தோன்றுகிறது.யாராவது,
உங்கள் குழந்தைகள் இக்காலத்தில் இவ்விளையாட்டை ஆடுவதுண்டா,இல்லை சொல்லிக்கொடுக்கும் மனப்பான்மை நம்மில் எத்துணை பேருக்கு இருக்கிறது.

ஆனாலும் காலங்கள் மாறி விட்டது.எனவே குழந்தைகளுக்கு விளையாட்டைப்பற்றியும் அவற்றின் இன்றியமையைப்பற்றியும் பேசுவபர் எத்துணைபேர்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் எந்த அளவுக்கு நமது கல்வியகங்களில் வழங்கப்படுகிறது. அப்படியே வழங்கப்பட்டாலும் அது எந்த அளவில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது.விளையாட்டுக்கல்விக்கு முக்கியத்துவம் நமது கல்வித்திட்டங்களில் வகுக்கப்படவே இல்லை.

வளரும் பிள்ளைகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தின் நன்மையை போதிப்பதில் முன்னோடியாய் இருப்பதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பெற்றோர்கள் பின்னோடியாய் இருக்கிறோம்.

ஏனென்றால் நாம் கற்ற கல்வி அவ்வாறு, நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது அவ்வாறு,படிக்கவில்லை என்றால் எதிர்காலம் கிடையாது. எட்டாம் வகுப்புக்கு பின் இந்தப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும்.
படிப்பில் இவ்வளவு சதம் எடுக்கவில்லை என்றால் உனக்கு அந்தப்படிப்பு கிடையாது. பின் எதிர்காலம் இருண்டுவிடும். பின் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டும்,என்றெல்லாம் பயமுறுத்தி உண்மையாகவே அக்குழந்தைக்கு படிப்பு மட்டுமே முதல்,விளையாட்டு எல்லாம் தேவை இல்லாத ஒன்று என்ற மனப்பான்மை வந்து விடுகிறது.

ஆனால் அந்த ஆசைகளை எல்லாம் உள்மனத்தில் குழிதோண்டி புதைத்து விட்டு படிப்பு, படிப்பு பின் மேலும் படிப்பு,ஒன்றொன்றாக கடந்தபின் வேலை தேடும் படலம்.வேலை கிடைத்தபின் அதில் நிலைக்க வேண்டிய கட்டாயம், நிலைத்தபின் பதவி உயர்வு, வெளிநாட்டுப்பயணம், ஓரிரு ஆண்டுகளில்
தாய்தந்தையரை மேலும் மகிழ்வு செய்ய திருமணம், திருமணமாகி சில ஆண்டுகளில் பெற்றோராகி விட்டு தமது பெற்றோர் தொடர கொடுத்த அதே
அம்மா அப்பா விளையாட்டை விளையாட ஆயத்தம் ஆகி விடுகிறோம்.

இதில் நம் குழந்தை டேவிக் பெக்காம் அல்லது ரோனால்தின்யோ ஆக முடியாதா, ஒரு ரஃபேல் நாடால் அல்லது ரோஜர் பெடரர் ஆக முடியாதா, என்ற ஏக்கம் நம்மில் பல பேருக்கு இருந்தாலும் அம்மா அப்பா விளையாட்டில் அதன் தாக்கம் மறைந்து விடுகிறது.

நூறு கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில், உலகத்தரம் கொண்ட கால்பந்து அணியை உருவாக்க ஏன் முடியவில்லை. ஆசிய அளவிலே போட்டியிடும் கூடைப்பந்து அணி ஏன் உருவாக்க முடியவில்லை.

ஹாக்கி ஹாக்கி என்றொரு விளையாட்டு நம் நாட்டில் இருந்தது,செல்லுமிடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வந்த அந்த விளையாட்டின் சமாதியில் இன்று புல் முளைத்து விட்டது. எத்தனையோ தயான் சந்த்கள்(ஜெர்மனியில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது) நாட்டில் மூலை முடுக்குகளில் இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லையே.

அரசாங்கம் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் எத்தனையோ வெளிநாட்டுஉள்நாட்டு நிறுவனங்கள் ஏன் மற்றெந்த விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமோ அல்லது ஆதரவோ அளிப்பதில்லை. விளையாட்டை விளையாட்டாய் மட்டும் கவனிக்காமல் ஏனிந்த பாரபட்ச
அரசியல் அணுகுமுறைகள்.ஒரே ஒரு விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை.

காரணம் மக்கள்,ஆம் மக்களேதான், ஒரு உணவகத்தில் சாப்பாடோ அல்லது அணுகுமுறையோ அல்லது கவனிப்போ சரியில்லை என்றால் அடுத்தமுறை வேறோரு உணவகத்தை நாடிச் செல்கிறோம்.

அடித்து விரட்டினாலும், சுவையிலும் கவனிப்பிலும் உபசரிப்பிலும் அணுகுமுறையிலும் எத்தனைதான் காரமிருந்தாலும் கசப்பிருந்தாலும் மீண்டும் அதே உணவகத்துக்கு சென்றால், தான் என்ற இறுமாப்பு அவ்வுணவகத்துக்கு வந்து விடுகிறது. யாரும் போகவில்லை என்றால் ஒன்று இழுத்து மூட வேண்டியதுதான், இல்லையென்றால் வேறிடம் தேடியோட வேண்டியதுதான்.

இப்படித்தான் மக்களின் அணுகுமுறையும் ஒவ்வொரு விளையாட்டின் பாலிலும் மாறாத வரை அவ்விளையாட்டுகள் வளம் பெறப்போவதில்லை.
இந்தியாவும் உலக விளையாட்டரங்கில் விலை போகப்போவதில்லை.

அதுவரை அம்மா அப்பா விளையாட்டு விளையாடிக்கொண்டிருபோம், உண்மையாகவே.


வந்து கும்மு கும்முன்னு கும்முங்க

மார்ச் 24, 2007

தோத்தா அதுக்காக இப்ப என்ன முகாரி ராகமா பாட முடியும்.காலேஜுல படிக்கிற எலலாருமா அரியர்ஸ் இல்லாம பாஸ் செய்யுறாங்க.

தோல்வியே வெற்றிக்கு முதல்படி. கசப்பு என்று ஒரு சுவை இருப்பதால்தான் இனிப்பு என்ற சுவை மேலாதாக தோன்றுகிறது .

இப்படி எல்லாம் சொல்லி மனச தேத்திக்கலாமுன்னு பாத்தா முடியலியே மக்கா.

நேர்ல போய்தான் வெக்கணும்ன்னு நெனச்சேன்.ஆனா அந்த தகுதி கூட நம்ம இந்திய டீமுக்கு இல்லிங்க.

அவுங்க ஆதமா சாந்தியடைய பிரார்த்திக்கவும்.

ஏதோ என்னால முடிஞ்சது ,இந்த மலர் வளையம்தான்.

16ம் நாள் காரியங்கள் கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடைபெறும்.


அடக்"கிறுக்கா"!

மார்ச் 23, 2007

பேசாம கொஞ்சநாளைக்கு தமிழ்மணத்துக்கு பேர மாத்தி வெக்க சிபாரிசு செய்யலாமுன்னு நெனக்கிறேன்.

என்னமோ கலைச்சேவையும் தமிழ்ச்சேவையும் செய்யுற மாதிரி ஆரம்பிச்சாங்க. இந்த கிறுக்கு புடிச்ச பசங்க போடுற ஆட்டம் தாங்கமுடியலியே.

புதுசா யாராவது வந்து பாத்தாங்கன்னா,அடப்பாவி ஏதோ
கீழ்ப்பாக்கம்,நாகூர் கோஷ்டிககிட்டே மாட்டிடம்டா சாமின்னு இல்ல நெனப்பாங்க.

இந்த கிறுக்க தம்பட்டம் அடிச்சுக்கறதுக்குன்னே கூட்டமா
அலையராங்கப்பா.இந்த ஆட்டத்த ஆரம்பிச்சு வெச்ச கிறுக்கு புடிச்ச புண்ணியவான்(வதி) யாருன்னே தெரியலியே.
இந்தக்கிறுக்குப்பத்தி நம்ம கூகுளாண்டவர் என்ன சொல்றாருன்னு எட்டிப்பாத்தா மக்கா , இங்க நீங்களும்தான் பாருங்களேன். ஒரு கூட்டமாத்தான் கிளம்பியிருக்காங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தாங்க எப்படி?
எப்படி?ன்னு கிறுக்குனாங்க.

கிறுக்குத்தனத்துக்கும் பைத்தியகாரத்தனத்துக்கும் என்ன மேன் வித்தியாசம். டமாரம் டம்பட்டம் தாரை தப்பட்டை
எல்லாமெல்ல அடிச்சு எனக்கு இது புடுச்சிருக்கு, இப்பிடி செய்வேன், அப்ப அப்படி செஞ்சேன், இப்ப இப்படி செய்வேன்.

தாங்க முடியலடா சாமி!

இதுல ஒரு அக்கா என்னடான்ன கோக்கு மாக்கு ங்கறாங்க. இன்னோரு அக்கா என்னடான்னா நாந்தான் அப்படி,அதனால நான் யாரையும் கூப்டு சொல்லமாட்டென். ஏன்னா இந்தப்பக்கத்துக்கு வர்ரவுங்க எல்லார்ருமே இந்தக் கிறுக்குகதானே, அப்படிங்கறாங்க. இன்னோரு அக்கா எழுத்தாளி ஆகுறதுக்கு தகுதியே கிறுக்குதான் அப்படிங்கறாங்க.

ஒருத்தரு நான் சாப்புடுறதுல கிறுக்குன்றாரு, இன்னோருத்தரு பீரு குடிகறதுல கிறுக்குன்றாரு.இன்னோரு அண்ணன் டென்ஷன் ஆவனா ஆகமாட்டனான்னு கிறுக்கறாரு.இன்னோரு அண்ணன் நான் ஒரு மாதிரிங்கறாரு.ஒரு பெரியண்ணன் அவரைப்பாத்தாலே சில பேரு ஓடுவாங்கன்றாரு.

படிக்க படிக்க எனக்கே கிறுக்கு புடிச்ச மாதிரி ஆவுதுங்க.

ஒரு கால் கிறுக்கோட இன்னோரு கால் கிறுக்கு சேந்தால்
அரைக்கிறுக்கு ஆவாங்களா, கணக்குப்படி அதுதானே சரி,
இங்க முழுக்கிறுக்கு இல்ல புடிச்சிறுக்கு.

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல சாமின்னு ஆளாளுக்கு சொந்தக்கிறுக்க சோகக்கிறுக்க போட்டுத்தாக்குறங்க.

படிக்கற நம்மளுக்கே இந்த நெலமென்னா அவுங்க கூட இருக்கறவுங்க நெலமைய நெனச்சா கிறுக்கு புடிக்கறமாதிரி இருக்குங்க.

அவுனுக்கு கிறுக்கு புடிச்சிருக்குடா, இவனுக்கு கிறுக்கு புடிச்சிருக்குடான்னு பேசியிருக்கோம்.எனக்கு அவளப்புடிச்சிருக்கு,இத செய்யப்புடிச்சிருக்கு., அதசெய்ய புடிச்சிருக்குன்னு பேசியிருக்கோம்.

என்னிக்காவது கிறுக்கு புடிச்சிருக்குன்னு பேசியிருக்கமா.
இல்ல பேசினாத்தான் நல்லாயிருக்குமா.கூட்டாளிகள்
இல்லாட்டி நண்பர் கூட்டம்தான் விட்டிருக்குமா.

கிறுக்கப்பத்தி பேசறதுக்கு கிறுக்கணுங்க, கால் கிறுக்கா, அரைக்கிறுக்கா, முக்கால் கிறுக்கா, முழுக்கிறுக்கா இதெல்லாம் முக்கியமில்லீங்க.

சரக்”கிருக்கா” , ஆமான்னாலும் இல்லேன்னாலும் அதுதாங்க உண்மை.

இந்த கிறுக்கு கிறுக்கறதுக்கு காரணம், நம்மள யாரும்
tag றதுக்கு முன்னாடி, இப்படி கிறுக்கிட்டா எஸ்கேப்பு ஆயிடலாமில்லே.


இப்பவே தண்ணி தவிக்குது

மார்ச் 22, 2007

இந்த ஐக்கிய நாடுகள் சபை அப்படின்னு ஒண்ணு இருக்காமே. அங்கே ஆணி புடுங்கறவுங்க யாராவது இருக்கீங்களா தம்புகளா. என்னோட பொறந்த தேதிய சொல்றேன்.ஏதாவது செய்ய முடிமான்னு பாருங்க.

ஏன்னா சும்மா வெட்டியா ஏதாவது ஒரு தேதிய எடுத்துக்க வேண்டியது. இன்னிக்கு அந்த நாளு , நாளைக்கு அந்த நாளு அப்படின்னு தேதி குறிச்சு
கொண்டாடச் சொல்ல வேண்டியது.இதுதான் அவனுங்க வேலைன்னு சொலறாங்க.

இப்படித்தாங்க கொஞ்ச வருஷத்துக்கு முந்தி மார்ச் 22ம் தேதிய “உலக நீர் நாள்” அப்படின்னு குறிச்சு விட்டாங்க.

உலகத்துல நிறைய தண்ணி இருந்தாலும்,(நல்ல குடிநீர்)
எல்லாருக்கும் கிடைக்குறது குதிரைக்கொம்பா போச்சு.

உலகம் சூடாயிட்டு வருதுன்னு எல்லாரும் பேசிக்கறாங்க.அது நம்ம தாய்க்குலங்க
எருவாமுட்டி வெச்சி தண்ணி காச்சறதாலியோ, வெறகு வெட்டி அடுப்பு எரிக்கறதுனாலியோ
போகிக்கு பழச எரிக்கறதாலே இல்லியாங்க.

மக்கள் தொகை அதிகமாக அதிகமாக எல்லாத் தேவைகளும் அதகமாகுது இல்லியா,
இப்போ பெட்ரோலுக்காக எப்படி சண்டை போடறாங்களோ அதே மாதிரி நல்ல குடிதண்ணிக்கும் சண்டை போடற காலம் ரொம்ப தூரத்திலே இல்லீங்கோ.

இப்பவே போடுலியான்னு கேக்காதீங்க.
இப்ப போடுற சண்டைய நம்ம ஆளுங்க நெனச்சா ஒரே நாள்லே தீத்துக்க முடியும். அவங்க அவங்க அரசியல் லாப நஷடம் பாக்காம, உக்காந்து பேசுனா, இந்தப்பிரச்சினைய மக்கள் பிரச்சினையா நெனச்சா தீர்க்க முடியாதா என்ன.

நம்ம குழந்த குட்டிகளுக்கு சொத்து,நகை நட்டு சேத்து பிரியோசனம் இல்லீங்க. குடிக்க ஒரு வாய் தண்ணி இல்லேனா எவ்ளோ சொத்து இருந்தாலும் ஒரு மண்ணாங்கட்டியும் பிரியோசனம் கிடயாதுங்க.

2030ம் வருஷத்துலே மொத்த சனத்துலே முக்கால்வாசி பேருக்கு குடிக்க, கழுவ தண்ணி இருக்காதுன்னு இதே ஐக்கிய சபையிலிர்ந்து சொல்றாங்கோ.

உலக உருண்டையிலே இருக்குற நதிகள்ளெ கிட்டத்தட்ட எல்லா நதிகளுமே வறண்டு போக வாய்ப்பு இருக்குன்னு வேறே சொல்றாங்க.

அதுலே முக்கியமா பத்து நதிகள சொல்றாங்க.

1. பெரியாறு (முல்லைப்பெரியாறு இல்லீங்க, இது புதரகத்திலே இருக்கிற பிராவோ நதி.).

2. டான்யூப் ஐரோப்பா கண்டத்துலே இருக்குரது,

3.வெள்ளியாறு (இது தென் அமேரிக்காவுலே இருக்குதுங்க.)

4. கங்கையாறு (சொல்லவே வேண்டியதிலே, இனி மோட்சத்தை தேடி காசிக்கு போக
வேண்டியது இல்ல, அதுவா நம்ம தேடி வரும்.).

5. யாங்சே (இது சப்பை மூக்கு சைனாக்காரனுது).

6. மேகாங் (இதுவும் இன்னோரு சப்பை மூக்கன், வியட்நாம்காரனது)

7.சல்வீன் ( சைனாவுலே பொறந்து பர்மா வழியா தாய்லாந்துக்கு ஓடறது

8. இண்டஸ் (போச்சு, போச்சு, சர்தாருங்க எல்லாம் அமெரிக்காவுக்கு டேக்ஸி ஓட்டப்போக வேண்டியதுதான்.
அது மட்டுமில்லாம திபெத்லே பொறந்து காஷ்மீர் வழியா கராச்சிக்கு ஓடறதாலே பாக்கிஸ்தானுக்கு ரொம்ப முக்கியம் இந்த நதி.இதுகு இன்னோரு சண்டை கூட வரலாம்)

9. நைல் (நதியா நதியா நைல் நதியான்னு இனி பாட முடியாதுங்க, அடப்பாவிங்களா, எத்தனை நாடுகள் இந்த
தண்ணிய பங்கு போட்டுக்கறாங்க. ரெண்டு ஸ்டேட்டுக்குள்ளே முடியிலியே மக்கா.)

10. முர்ரெ டார்லிங் (யாரையோ கூப்புடற மாதிரி இருக்குங்களா, ஆஸ்திரேலியாவும் அவுட்).

இதுக்கப்புறமும் தயவு செஞ்சு யாரும் தண்ணிய தண்ணியா செலவு செய்யாதீங்க.அப்புறம் வெட்டியா அடிச்சுக்க வேண்டியிருக்கும். அப்புறம் ஒழுகுற ரத்தத்துக்கு கூட கழுவ தண்ணி இருக்காது.( என்ன, காபித்தூளும் மஞ்சத்தூளும் வெச்சுக்கலாங்கறீங்களா, போய்யா மொக்க, குடிக்கவே தண்ணி இல்லே, இதுல எங்கய்யா இதெல்லாம் விளையும்.)

என்னவோ சாமி, மனசுலே பட்டத சொல்லிட்டேன்.
இந்தப்பிரச்சினைக்கு முன்னாடி சொத்து, சாதி, மதம் இதெல்லாம் தூசி.

தயவு செஞ்சா மக்கா, எல்லாரும் யோசிங்க, படுத்துட்டு உக்காந்துட்டு, சாப்புடும்போது , நிக்கும்போது, கார்ல பஸ்ல ட்ரெய்ன்ல விமானத்துல, முக்கியமா ஒவ்வோரு வாய் தண்ணி குடிக்கும்போதும் யோசிப்பீங்களா.
(எங்கியாவது ரெண்டு மூணு கெணறு வாங்கி போடலாம்ன்னு யோசிக்காதீங்க,வெறும் காத்துதான் வரும் பாம்பும் தவளையும்தான் அங்கெ வீடு கட்டும்)

இந்த எதிர்காலப் பிரச்சினையில நம்ம பங்கு என்ன,
என்ன செஞ்சு எதிர்காலத்தை காப்பாத்த முடியும், ஒரெ டம்ளர் தண்ணிய நாலு பேர் ஸ்பூன்லே குடிக்க முடியுமா.

யோசிங்க,தயவு செஞ்சு யோசிங்க.


நான் ஒரு பொறுக்கி

மார்ச் 22, 2007

வண்டிச்சக்கரம். இந்தப்பேர்ல ஒரு தமிழ்ப்படம் வந்துச்சுன்னு நினைக்கிறேன். சிவக்குமார் கதாநாயகனாக நடித்தது.சில்க் கூட இதில்தான் அறிமுகம்ன்னு ஒரு ஞாபகம்.

வண்டிச்சக்கரம்ன்னு படம் எடுத்தாங்க, ஆனா கொசுவத்திச்சுருள் அப்படின்னு யாராவது படம் எடுத்தாங்களா.ஏன்னா flash back போகணுன்னா பொதுவா தமிழ்பட்ங்களின் நியதி அதுதானே.

flashback அப்படின்னா ஒண்ணு கொசுவத்தி சுருள் சுத்தும் இல்லாட்டி வண்டிச்சக்கரம் சுத்தும்.அதேதாங்க நானும் ஒன்னு சுத்தப்போறேன்.

தலைப்ப இன்னோரு தடவை படிச்சுக்கங்க.அதாவது நான் ஆறாங்கிளாஸ் படிக்கும்போது பொறுக்க ஆரம்பிச்சேங்க.நீங்க நெனக்கிற மாதிரியெல்லாம் இல்லீங்க.

நான் பொறுக்க ஆரம்பிச்சது தீப்பெட்டி.அதேதாங்க.தீப்பெட்டின்னா ஞாபகம் சீட்டாபைட்.256 அனற்புள்ளிகள்.

தபால்தலை சேகரிப்பு மாதிரி இதுவும் ஒரு விருப்ப விளையாட்டுதாங்க.ஆனா செலவு எதுவும் இல்லாத விளையாட்டு.பள்ளிக்கூடத்துக்கு போகும்போதும் வரும்போதும்
வழியிலே கிடைக்கிற ஒவ்வொரு தீப்பெட்டியையும் பாத்து பொறுக்கி எடுத்துக்குவோம்.

எங்க தெருவுலே தம் அடிக்கற அண்ணனுங்ககிட்ட போயி “அண்ணா, தீப்பெட்டி இருக்குங்களா”ன்னு கேட்டா, “இர்ரா,உங்க வீட்ல சொல்றோம்பானுங்க”.

“அண்ணா, இல்லீங்ண்ணா, தீந்து போன தீப்டி இருந்தா குடுங்ணா என்போம்.”எதுக்குறா” என்பார்கள்.

“கலெக்ஷனுங்ணா” என்போம். “போடா!, படிக்குற பசங்களுக்கு வேற வேலை இல்லியா” என்பார்கள்.(அதே அண்ணனுகளுக்கு முன்பாக பெட்டிக்கடையில் தங்கத்துகள் அரசர்
ஊதுனது வேறு கதை).

இப்படியாக ஆண்டுவருட இறுதித்தேர்வு முடிந்து ஒவ்வொருவரும் வேறு வேறு ஊர்களுக்கு சென்று பொறுக்கி வருவோம்.ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் முன்,
விளையாட்டுத்திடலில் கண்காட்சி நடக்கும்.தீப்பெட்டி கண்காட்சிதான்.

இதிலே ரொம்ப “ACE” வேல்யூ கொண்டது ஜோக்கர் பிராண்ட். ஜோக்கருக்கு அடுத்தது பபூன். ஜோக்கர் வைத்திருப்பவன் ஹீரோதான். ஜோக்கர் அதிகமாக விற்பனையானது
சென்னையில்தான் என்று நினைக்கிறேன்.

அதனால் சென்னையில் இருந்து வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்தவுடன் அங்கு பொறுக்கச்செல்வோம். (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் இதற்கு)-
முதல் கம்பார்ட்மெண்டில் ஏறி கடைசி கம்பார்ட்மெண்டில் இறங்குவோம். இதில் ஏழாப்பு படிக்கும்போது ரஜினியை நேருக்கு நேர் வேறு சந்தித்தோம். அது வேறு கதை.

பெட்டி பெட்டியார் ஏறி இறங்கும்போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது,பார்த்தாலும் ஐஸ் வெக்கத்தெரிந்திருக்க வேண்டும்.இல்லாட்டி வீட்டில் சொல்லி விட்டால் உங்க வூட்டு அடியா எங்க வூட்டு அடியா, அதெல்லாம் ஒரு காலமய்யா. அதப்பத்தி சொன்னா ஒரு பத்து காலம் எழுதலாம்.

இப்படியாக சேர்த்த கலைப்பொருட்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வேறு வைக்க வேண்டும். கடைசியாம் மாட்டுனேன் பாருங்க ஒரு நாள்.

எங்கப்பா ஒரு நாள் திருப்பத்தூர் கல்யாணத்துக்கு போகணும்ன்னு சொல்லிட்டிருந்தாரா, அதைய கேட்டு, அம்மாவிடம் போய், “அம்மா, அப்பாவ திருப்பத்தூர்ல இருந்த் தீப்பெட்டி வாங்கிட்டு வரச்சொல்லும்மா”.

“ஏண்டா,ராஜா.”

“அங்கதாம்மா ஜோக்கர் மேட்ச் பேக்டரி இருக்குது.ஒரு பத்து தீப்பெட்டி வாங்கிட்டு வரச்சொல்லும்மா”.

“எதுக்குடா பத்து”.

“ஒன்னொன்னும் நூறு ஒட்டகத்துக்கு சமம்மா!”

“போடா ,எனக்கு ஒண்ணும் புரியலை”.

உதவிக்கு வந்த அப்பா விளக்கமாய் கேட்க, ஆர்வக்கோளாரில் என்னுடைய கலெக்ஷ்னைக் காட்ட , பிஞ்சு போனது விளக்குமாறு மட்டுமல்ல.

என்னுடைய கலையார்வமும்தான்.


தமிழர்கள் சாதிப்பிரியர்களா??

மார்ச் 22, 2007

நம்ம கோயமுத்தூர் வாத்தியாரு நேத்து ஒரு பதிவு போட்டிருந்தாங்க, ஜாதிகள் இருக்குதடி பாப்பா ன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்,,

அத பாத்தவுடனே ஒரு மொக்கையா ஒரு யோசனை வந்துச்சு.
முதல்லியே மூணும் மொக்கை, இது அதுக்கடுத்த உப்புமா.

(ம்ம்,செமயா மாட்டிகிட்டியா பெருசு!வேண்டாமுன்னு சொன்னா கேக்கவா போறே!பங்களாதேசதுக்கிட்ட மாட்ன இந்தியா டீமு மாதிரி உன்னை பிரிச்சு மேயப்பொறாங்க.இல்லையில்ல, இலங்கைகிட்ட மாட்ன பங்களாதேஷ் மாதிரியோ,எப்படியோ உனக்கு டின் கட்டப்ப்போறாங்க.சாக்கிரதயப்பூ.)
இப்பவே ஒருத்தனும் கண்டுக்கறதில்ல, இனி எப்படியோ.

சேச்சே,நம்மதான் தல கைப்புள்ள(எங்கிட்டுயா போனாரு,ஆளையே காணோம், யாராச்சும் துபாய்க்கு டிக்கிட் வாங்கி குடுத்துட்டாங்களா).
தொண்டர்கள் ஆச்சே, எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு நல்லவங்களாத்தானே இருப்போம்.

இல்ல,நான் என்ன சொல்ல வர்ரேன்னா,இந்தியாவுலே இருக்கும்போதுதான் சாதி சங்கமுன்னு ஒரெபிலிமு காட்டுறத பாக்குறோம்.

அடேங்கப்பா, கவுண்டர், செட்டியார்,ஐயர்லே ஆரம்பிச்சு அரிசனங்களில் பல பிரிவுகள் அப்படின்னு தமிழ்நாட்டு கெசட்டுலே பாத்தீங்கன்னா, தலையிலே இருக்குற முடியை விட அதிக எண்ணிக்கையில பிரிவுகள், உட்பிரிவுகள்.

மக்கா,இதுலே எத்தன பேரு கடவுச்சீட்டு (அதாங்க பாஸ்போர்ட்)வாங்கும்போது அதுலே சாதிப்பிரிவையோ, அதுலே வர்ற உட்பிரிவையோ போட்டிருப்பீங்க.0.01% பேரு கூட இருக்கமாட்டிங்க.

ஏன்னா, இந்த சாதி சமாச்சாரம் எல்லாம் கடலைத்தாண்டுனா,என்னவாகுமுன்னு நம்ம ஐய்யாமாருங்களைத்தான்(ஐயமாருங்க இல்லீங்கோவ்)கேக்கணும்..அவங்கதானே அப்பப்ப குடும்பத்தோட வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போறவங்க.

ஆனா இதுல பாருங்க,வடநாட்டுலே இருக்கறவுங்க எங்க போனாலும் கூடவே கொண்டு போறாங்களே, அது ஏங்க???.
“யாதவ்” லே ஆரம்பிச்சு “அத்வானி,அம்பானி,கேல்வானி,கேஷ்வானி” (தேவ்யானி இவுங்கள்ள சேரமாட்டாங்க) வரைக்கும்,ஜாதியையும் உட்பிரிவையும் கூடவேதான் வெச்சிருக்காங்க.

நல்ல வேலை மக்கா, நம்மளுக்கு இங்குலீசுகாரன் வேற மாதிரி சொல்லிக்குடுத்துட்டு போயிட்டான். இனிசியல் இல்லாட்டி சர்நேம் வச்சுக்குங்க,அதாகப்பட்டது அப்பா பேர்ல முத எழுத்த போட்டுக்க, அப்பதான் எல்லாம் செல்லுபடி ஆகும்ன்னு சொல்லிக்குடுத்துட்டான்.இப்பத்தானே போன ஆட்சியிலே அம்மா பேரையும் இனிசியலா போட்டுகிட்டாலாம்,கூடவே வேணுமுன்னா ஊர் பேரயும் வெச்சுக்கங்க,அப்படின்னாங்க.

நம்ம பக்கத்து நாட்லெ, அதாங்க கேரளாவுலே எப்பவுமே குடும்பத்து பேரை அடைமொழியா சேத்துக்குவாங்க. ஆனா அத வெச்சி சாதியெல்லாம் கண்டு புடிக்க முடியாதுங்க.

இதுல மட்டும் பாருங்க, ஸ்பெயிகாரன் நம்ம ஊருக்கு வர்லயப்பூ. வந்திருந்தா நம்மபாடு டரியல்தான். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன், கேட்டுக்கங்க.

அவிங்க எல்லாம் அப்பா குடும்பத்தோட பேரு, இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரொட, அம்மா குடும்பத்து பேரு இல்லாட்டி அவுங்க கூட்டத்தோட பேரு, ரெண்டையும் குழந்தையோட பேருக்கு அப்புறம் போட்டுக்குவாங்க. அதாவது சொந்தப்பேருக்கு அப்புறம் ரெண்டு சர்நேம் வெச்சுக்குவாங்க.

நெனச்சு பாருங்க இந்த முறையில ஒரே சாதியிலே கல்யாணம் செஞ்சுட்டா, பொறக்கற கொழந்தைக்கு என்ன பேரு வெப்பாங்க.

(உதாரணத்துக்கு எல்லாரும் மன்னிச்சுக்குங்க.)

நடிகர் சிவக்குமார்,மகன் சூர்யாவுக்கு,, சூர்யா கவுண்டர் கவுண்டர் அப்படின்னுதானே வெப்பார்.

இப்போ கலப்பு திருமணம் செஞ்ச சூர்யா, அவரோட குழந்தைக்கு எப்படி பேருவெப்பார்.
பொறக்குற ஆம்பிள குழந்தைக்கு அப்பா பேர வெச்சாருன்னா,

பழனிச்சாமி கவுண்டர் xxxxx. (ஜோ என்ன கூட்டம்ன்னு தெரியலீங்க)
அப்படின்னுதானே வெக்க முடியும்ம்.

ஆக வயசான காலத்துல கல்யாணப்பத்திரிக்கையிலே போடறத தவிர நம்ம குடிமக்கள், வேற இடத்துலே அதிகமா சாதிப்பேர உபயோகம் செய்யாத காரணத்தாலே,,
நம்ம தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சாதிப்பிரியர்கள் இல்லை சொல்லிட்டு

ஐயாம் தி எஸ்கேப்பு.


திராவிடனுக்கோர் கடிதம்

மார்ச் 20, 2007

உடன்பிறப்பே இலவச தொலைக்காட்சிப்பெட்டிகள் வழங்கப்பட்டதே நம் கண்மணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை கண்டு மகிழ வேண்டுமென்ற ஆவலால்தான்.

நம் வீட்டுப் பெண்டிரும் குழந்தைகளும் அக்கம்பக்கத்தாரை அவர்கள் நடுஇரவு மசாலா பார்த்து களிக்கும்வேளையில் சிவபூசைக்கரடியாய் உள்நுழைந்து லாவணி பாடவைக்க வேண்டாமென்ற நப்பாசையால்தான்.

அகில இந்திய அணியின் தலைமைக்கு ஒரு திராவிடன் தான் தலைமை தாங்க வேண்டும் என்று முற்போக்கு கூட்டணியின் சார்பாக மடலிட்டு, அதனை நிறைவேற்றியும் தந்த நடுவண் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் எமது உள்துறை அமைச்சகத்தின் மூலமாக மாவட்டம்தோறும் கலைநிகழ்ச்சிகளும், ஊராட்சிகள்தோறும் கிட்டிப்புள் ஆட்டங்களும் நடாத்திட, அரசாணை இன்றே கையொப்பமிட கோப்புகள் தயாராகி வரும் இந்த வேளையில்,
நமது கிராமத்து விளையாட்டான கிட்டிப்புள், இன்று கடல் கடந்து கிரிக்கெட் என்ற பெயரிலே ஆங்கிலேயர்கள் விளையாடினாலும், நம் கிராமிய கலைகள் கிராமி அவார்டு வாங்காவிட்டாலும்,
மட்கிபோகக்கூடாதென்ற ஒரே காரணததால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளினூடே இடைவேளை நேரத்தில் கிட்டிப்புள் காட்சிப்போட்டிகள் நடத்திக்காட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததை, ஏதோ நம் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி தமது சகாக்களுடன் சென்று, கிட்டிப்புள் விளையாடி வீரம் காட்டி விடுவாரோ என்ற அச்சத்தாலும், இலவசமாக வழங்கப்பட்ட தொலைக்காட்சிகளில் எதிர்க்கட்சி அணித்தலைவர்களின் முகம் தெரியாது என்று பொய்யுரைத்திட்டு, அப்புகழை பாழ்படுத்தி,மக்களை திசை திருப்ப எதையோ நினைத்து எதை யோ இடித்த கதையை நமக்கு நினைவுபடுத்திய அம்மையாரின் ஒரு நாள் உண்ணாவிரதக்களியாட்டங்கள்,எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனை இடர்களையும் நெருஞ்சி முட்களாய் தேய்த்தெரிந்திட்டு,நாம் நடந்த பாதைகள்தான் எத்தனை,போராட்டக்களங்கள் எத்தனை,கண்துய்யாது விழித்திருந்த நாட்கள்தான் எத்தனை, இப்படி எத்தனை எத்தன்கள் குறிக்கிட்டாலும் தடைகளனைத்தும் தகர்த்தெரிந்து தம்பி வா, தயங்காது வா.

கட்சியின் பெயரில் திராவிடத்தைக்கொண்டு புற்றீசல் போல் புதுக்கட்சிகள் முளைத்தாலும்,அவ்’விடங்’களையெல்லாம் வெற்றி கொண்டு, திராவிட ரத்தத்தையும் பெயரையும் அகத்தையும் தன்னகத்தே வைத்துள்ள தென்னகத்து சிங்கமே, திராவிடனே, புறப்படடா தம்பி,போர் முரசு கொட்டடா, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனென்ற கம்பனின் கட்டுத்தறியாய், கட்டவிழ்த்த காளையாய் செல்லடா என் தங்கமே, வெற்றியும் தோல்வியும் போர்வீரனுக்கு இயல்பென்றாலும், இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருகிறதடா என் கண்மணி.

இப்பொழுதெல்லாம் சமர்கள் நான்கு சுவர்களுக்குள் முடிவெடுக்கப்படுகின்றதென்றாலும் தோல்விகளை தாங்கக்கூடிய தோள்திறன் உங்களைப்போன்ற இளங்காளைகளிடமுண்டென்றாலும், வாழ்வா சாவா என்ற நிலை நமக்கின்று.

ப்பூவென்று ஊதினால் சருகும் பறந்து செல்லும் தூரத்திலுள்ள இலங்கையினரை ப்ப்ப்பூவென்று ஊதி வெற்றி கொள்ள வேண்டுமடா செல்வனே!.

நீ கேட்ட அனைத்து தளவாடங்களையும் உனக்களிக்க ஏறபாடு செய்துள்ளோமே. எதிரணியினர் கூலிப்படை வைத்துள்ளார் என்றாய், கங்”கூலி”யையும் உனக்களித்தோம். கடல் கடந்து செல்ல வேண்டுமென்றாய், “தோணி” யையும் துணைக்கழைத்தோம்.இது கள்ளத்தோணி அல்ல.யாரையோ நினைவுபடுத்தினால் நாம் பொறுப்பல்ல.

சேவை புரிய “சேவா” க்கையும் இலவசமாயளித்தோம். கேரளத்து சின்னக்குயில்களையும், பைங்கிளிகளையும் சேடிகளாய் துணைக்கு அனுப்ப முடியவில்லையென்றாலும், அவர்களின் சின்ன சேட்டன் “சிரிசாந்து”வையும் துள்ளி விளையாட உன்னோடு சேர்த்தோம்.

உருவத்தில் சின்னவனாக இருந்தாலும் பெயரிலே பத்தையும் உள்ள”டக்”கிய டெண்டுல்கரையும் தட்டிக்கொடுத்து அனுப்பினோம்.

வயதிலே பெரியவன், இனமானச்சிங்கம் சாளுக்கிய வம்சா வழியாம் அணில் “கும்”ளே வும் உன்னுடந்தானே.

அதோ, கம்பீரமாய் நடைபயிலும் கம்பீரையும், சரவண பவன் உணவகத்தை நினைவு படுத்தினாலும், படுத்தாத ராபின் ஊத்தப்பாவையும், ராசபுத்திரனோ என்று கண்டோர் வியக்கும் யுவராசு சிங்கும், கைப்பும், ரைய்னாவும் அடடா , அடடா என்னே அழகு. உன் படை.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

காட்டுக்கு சென்ற அண்ணனின் பாடம் பற்றி பின் நடந்த இலக்குவனின் பேர் போற்றும் வி.வி.எஸ் இப்போது ஓடிப்பழகுகிறானாம்.

ஆயிரம்தான் ஆனாலும் நம் வீட்டு மாப்பிள்ளைகளை நாம் மறக்கக்கூடாது.நான் நம் வீட்டு மலரை மணந்த முத்தையனை சொல்கிறேன்.ஆனால் விதி கொடியது, அவன் இருப்பதோ எதிர் முகாமில்.

ஜெயசூரியன், தவறாமல் திருப்பதி வந்து செல்பவன். நம் சின்னத்தில் சிறிதே அவன் பெயரில் இருந்தாலும்,முதல் பாதியை உச்சரிக்க முடியுமா நம்மால்.

1952ல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆங்கிலேயர்களை சென்னையில் பூண்டோடு வென்றோமே ,அப்போழுதெல்லாம் நீ இருக்கவில்லையடா , ரஞ்சித்சிங்காரும் துலிப்சிங்காரும் சிங்காரமாய் கட்டிக்காத்த இப்போர்க்களங்கள் நீ பாடத்தில் மட்டுமே படித்திருப்பாய்.

1983ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நாம்தான் வென்றோம். அந்த அணிக்கு தலைமை தாங்கியவன் தன்மானத்தமிழன். அப்போதெல்லாம் நீ பால் மணம் மாறா பச்சிளம்பாலகன்.டென்னிஸ் பால் வைத்து , சுவற்றிலே மூன்று கோடுகளை வரைந்திட்டு, தென்னை மட்டை வைத்து ஆடிப்பழகிய காலம் அது.

கட்சிப்பணிகளும் அரசுப்பணிகளும் பின்னழைத்தாலும், பள்ளித்தேர்வுகளும் கல்லூரித்தேர்வுகளும் காத்திருந்தாலும், கப் வெல்வது அல்லவா, முக்கியம் நமக்கு.

மீண்டும் சொல்கிறேன், மீண்டு வா, மீட்டெடுத்து வா.

எதிர் கொள்ள இருப்பது போர்வாளேந்திய சிங்க இலச்சினயை கொடியிலே பதித்த இலங்கை அணி.

பெர்முடா அணியை வெற்றி கொண்டதில் ஆறாயிரம் கோடி மிச்சமாம்.எக்காளமிட்டு எழுதுகின்றன் இன்றைய தினசரிகள்.
மிச்சமெல்லாம் மிலேச்சர்களின் எச்சம். நிதியா முக்கியம் நமக்கு.

இறுதிப்போட்டிக்கு சென்றடைந்தால் தனி விமானத்தில் மேற்கு இந்தியாவுக்கு அழைத்துச்செல்கிறேன் என்று வாக்கு குடுத்திருக்கிறேன் அமைச்சரவையில். இடமிருந்தால் எல்லா நிதிகளையும் கொண்டு வந்து சேர்க்கிறேன்.

போற்றுவார் போற்றட்டும்! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்!.

கவலைப்படாதே, வெற்றி நமதே.


ஷேவாக்கும் டோண்டுவும் நானும் ஒன்றா???

மார்ச் 18, 2007

ரொட்டிக்கடையிலே குஞ்சேட்டன் ரொட்டி சுத்திக்குடுத்த மலையாளப்பத்திரிக்கையாகட்டும்,(அப்பெல்லாம் அதுல ஷகிலா படம் வராது)அதுக்கும் முன்னாடி பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலே
அண்ணாச்சி கடையில் பட்டாணி கட்டுன பழைய ராணி,கல்கண்டு பத்திரிகைகளாகட்டும்,புகைவண்டியிலே இடம் புடிக்கறதுக்கு யாரோ போட்டுட்டு போன தெலுங்கோ, கன்னடமோ, ஒரியா பத்திரிக்கையாகட்டும்(அதப்பாத்தாலே ஜிலேபி, ஜிலேபியாத்தான் நமக்கு தெரியும்கறது வேற விஷயம்) படிக்கறதுங்கறது ஒரு சுவாரசியமான சமாச்சாரம்தானுங்களே.

படிப்பு சம்பந்தமான புத்தகங்களை தவிர மத்த எதையும் படிக்கறதுங்கறது ஒரு சமயத்துலே ஒரு வெறியாவே மாறிப்போனது.(“நல்லாப்படி சாமி”ன்னு பாட்டி சொன்னத
நான் தப்பா புரிஞ்சு வெச்சுருந்தேன்).

சரி பெருசு, மேட்டருக்கு வா, அப்படிங்கறீங்க.இன்னிக்கு மேட்டர் எதுவும் சிக்கலீங்க.அதான் மேட்டர். (“ஒரு வாரம் எப்படி ஓட்டப்போறே”) கெக்கெக்கேன்னு நீங்க சிரிக்கரது கேக்குது.

நேத்து வரைக்கும் மொக்கை போட்ட ஷேவாக் இன்னிக்கு பட்டைய கிளப்பிட்டாரு. இதுல ஆறி அவலாகி நொந்து நூடில்ஸான மேட்டருங்கள எழுதுன யாருங்க படிப்பா.
சரி எதுனாச்சும் குட்டைய குழப்பலாமான்னு பாத்தா இன்னிக்கு அண்ணன் டோண்டு இப்படி ஒரு பதிவு போட்டிருந்தார்.

நான் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எந்த நாட்டுக்காரரும் வெளிநாட்டில் இருக்கும்போதோ அல்லது தாய்நாடு திரும்பியபோதோ தமது மொழியை மறந்ததில்லை. ஆனா நம்ம நாட்டுலே பாருங்க, வெளிநாட்லியோ, இல்ல உள்நாட்லியோ ரெண்டு ஹிந்தி பேசுபவர்கள் சந்தித்தால் 99% ஹிந்தியில்தான் பேசிக்கொ(ல்)ள்கிறார்கள். இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் சம்சாரித்து கொள்கிறார்கள். தெலுகு பேசுபவர்களும் அஃதே.(ஹையா,ஆயுதஎழுத்தை உபயோகிச்சாச்சு).

ரொம்ப நாள் கழிச்சு இந்தியாவுக்கு போனா, சந்திச்சவுங்க எல்லாம் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு ஆங்கிலத்திலேயே உரையாடல் நடத்த முயற்சித்தாங்க.அதுக்காக படிக்கறது புடிக்கறது எல்லாம் தமிழ்லியே இருக்கணுமுன்னு நான் சொல்ல வர்லீங்க. நம்மளோட ஆதங்கம் எல்லாம் முடிந்தவரை தமிழில் அளவளாவ வேண்டுமென்பதே. விடுமுறையில் சென்னையில் சென்ற பல இடங்களிலும் எங்களை பலரும் கேட்டுக்கொண்டது “சாதாரணமா பேசுங்களேன்,(அதாவது தமிங்லீசு) ஏன் இப்படி சிலோன்காரன் மாதிரி தமிழ்லியே பேசுறீங்க?”.

இங்கு பெரு நாட்டில் நாங்கள் வசிக்கும் ஊரில் நாங்கள் மட்டுமே தமிழ் பேசுபவர்கள்.தமிழ் பேசுபவர்களை சந்திக்க வேண்டுமென்றால் ஆயிரத்து முன்னூறு கல் தொலைவில் தலைநகரத்தில் உள்ள மூன்றே மூன்று குடும்பங்கள் மட்டுமே.

யாருடைய தாய்மொழியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களை, தூங்கும்போது திடீரென்று தூக்கத்தை கலைத்தால் முதலில் அவர்கள் பேசும் மொழியே தாய் மொழின்னு சொல்லுவாங்க.

என் செய்வது,தலைஎழுத்து. எங்க வீட்டில் ‘ஸ்பானிசு’ இல்ல பேசராங்க.

டிஸ்கி: ஷேவாக்கு,டோண்டு இதெல்லாம் சும்மா கவர்ச்சிக்கு.
ராயல்டி ஏதாச்சும் வேணும்ன்னா ஐ யாம் தி எஸ்கேப்பு.