ஷேவாக்கும் டோண்டுவும் நானும் ஒன்றா???

ரொட்டிக்கடையிலே குஞ்சேட்டன் ரொட்டி சுத்திக்குடுத்த மலையாளப்பத்திரிக்கையாகட்டும்,(அப்பெல்லாம் அதுல ஷகிலா படம் வராது)அதுக்கும் முன்னாடி பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலே
அண்ணாச்சி கடையில் பட்டாணி கட்டுன பழைய ராணி,கல்கண்டு பத்திரிகைகளாகட்டும்,புகைவண்டியிலே இடம் புடிக்கறதுக்கு யாரோ போட்டுட்டு போன தெலுங்கோ, கன்னடமோ, ஒரியா பத்திரிக்கையாகட்டும்(அதப்பாத்தாலே ஜிலேபி, ஜிலேபியாத்தான் நமக்கு தெரியும்கறது வேற விஷயம்) படிக்கறதுங்கறது ஒரு சுவாரசியமான சமாச்சாரம்தானுங்களே.

படிப்பு சம்பந்தமான புத்தகங்களை தவிர மத்த எதையும் படிக்கறதுங்கறது ஒரு சமயத்துலே ஒரு வெறியாவே மாறிப்போனது.(“நல்லாப்படி சாமி”ன்னு பாட்டி சொன்னத
நான் தப்பா புரிஞ்சு வெச்சுருந்தேன்).

சரி பெருசு, மேட்டருக்கு வா, அப்படிங்கறீங்க.இன்னிக்கு மேட்டர் எதுவும் சிக்கலீங்க.அதான் மேட்டர். (“ஒரு வாரம் எப்படி ஓட்டப்போறே”) கெக்கெக்கேன்னு நீங்க சிரிக்கரது கேக்குது.

நேத்து வரைக்கும் மொக்கை போட்ட ஷேவாக் இன்னிக்கு பட்டைய கிளப்பிட்டாரு. இதுல ஆறி அவலாகி நொந்து நூடில்ஸான மேட்டருங்கள எழுதுன யாருங்க படிப்பா.
சரி எதுனாச்சும் குட்டைய குழப்பலாமான்னு பாத்தா இன்னிக்கு அண்ணன் டோண்டு இப்படி ஒரு பதிவு போட்டிருந்தார்.

நான் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். எந்த நாட்டுக்காரரும் வெளிநாட்டில் இருக்கும்போதோ அல்லது தாய்நாடு திரும்பியபோதோ தமது மொழியை மறந்ததில்லை. ஆனா நம்ம நாட்டுலே பாருங்க, வெளிநாட்லியோ, இல்ல உள்நாட்லியோ ரெண்டு ஹிந்தி பேசுபவர்கள் சந்தித்தால் 99% ஹிந்தியில்தான் பேசிக்கொ(ல்)ள்கிறார்கள். இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் சம்சாரித்து கொள்கிறார்கள். தெலுகு பேசுபவர்களும் அஃதே.(ஹையா,ஆயுதஎழுத்தை உபயோகிச்சாச்சு).

ரொம்ப நாள் கழிச்சு இந்தியாவுக்கு போனா, சந்திச்சவுங்க எல்லாம் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு ஆங்கிலத்திலேயே உரையாடல் நடத்த முயற்சித்தாங்க.அதுக்காக படிக்கறது புடிக்கறது எல்லாம் தமிழ்லியே இருக்கணுமுன்னு நான் சொல்ல வர்லீங்க. நம்மளோட ஆதங்கம் எல்லாம் முடிந்தவரை தமிழில் அளவளாவ வேண்டுமென்பதே. விடுமுறையில் சென்னையில் சென்ற பல இடங்களிலும் எங்களை பலரும் கேட்டுக்கொண்டது “சாதாரணமா பேசுங்களேன்,(அதாவது தமிங்லீசு) ஏன் இப்படி சிலோன்காரன் மாதிரி தமிழ்லியே பேசுறீங்க?”.

இங்கு பெரு நாட்டில் நாங்கள் வசிக்கும் ஊரில் நாங்கள் மட்டுமே தமிழ் பேசுபவர்கள்.தமிழ் பேசுபவர்களை சந்திக்க வேண்டுமென்றால் ஆயிரத்து முன்னூறு கல் தொலைவில் தலைநகரத்தில் உள்ள மூன்றே மூன்று குடும்பங்கள் மட்டுமே.

யாருடைய தாய்மொழியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களை, தூங்கும்போது திடீரென்று தூக்கத்தை கலைத்தால் முதலில் அவர்கள் பேசும் மொழியே தாய் மொழின்னு சொல்லுவாங்க.

என் செய்வது,தலைஎழுத்து. எங்க வீட்டில் ‘ஸ்பானிசு’ இல்ல பேசராங்க.

டிஸ்கி: ஷேவாக்கு,டோண்டு இதெல்லாம் சும்மா கவர்ச்சிக்கு.
ராயல்டி ஏதாச்சும் வேணும்ன்னா ஐ யாம் தி எஸ்கேப்பு.

6 பதில்கள் “ஷேவாக்கும் டோண்டுவும் நானும் ஒன்றா???” க்கு;

  1. சந்தோஷ் aka Santhosh சொல்வதென்னவென்றால்:

    //ஏன் இப்படி சிலோன்காரன் மாதிரி தமிழ்லியே பேசுறீங்க?”.//
    சரியா சொல்லி இருக்கிங்க பெருசு.

  2. dondu(#11168674346665545885) சொல்வதென்னவென்றால்:

    இரண்டு தமிழர்கள் சந்தித்து கொண்டால் தமிழில்தான் பேச வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. அதே சமயம் மூன்றாவதாக தமிழ்மொழி தெரியாதவர் இருந்தால் அவருக்கு புரிய வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு எனது பதில், பேச்சு விஷயம் அந்த மூன்றாவது மனிதர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மட்டுமே இக்கேள்விக்கு பொருள் உண்டு.

    என்னைப் பொருத்தவரை நான் ஒரு வட இந்தியரை சந்திக்க நேர்ந்தால் அவருடன் பேச தன்னைப் போலவே ஹிந்திதான் என் வாயில் வரும். அவர்களில் சிலர் சில நேரங்களில் ஆங்கிலம் பேச முயன்றால் நான் விடாப்பிடியாக ஹிந்தியில்தான் பேசுவேன். ஹிந்திக்கே இப்படியிருக்க, தமிழை பற்றி கேட்கவும் வேண்டுமோ?

    ஆங்கிலத்தில் ஒருவர் பேச முயற்சிப்பதற்கு முக்கிய காரணமே தான் அந்த மொழியில் பேச முடியும் என்று நிரூபிக்க முயலுவதேயாகும்.

    என்னை பொருத்தவரை அம்மாதிரி நிரூபிக்க எனக்கு ஒரு தேவையும் இல்லை.

    இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. இலவசக்கொத்தனார் சொல்வதென்னவென்றால்:

    சரி. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். நட்சத்திரம் ஆனாலும் மொக்கைப் பதிவு மட்டுமே போடுவேன் என்ற உன் உறுதியைப் பாராட்டுகிறேன்.

  4. வெற்றி சொல்வதென்னவென்றால்:

    நல்ல பதிவு.

    /* “சாதாரணமா பேசுங்களேன்,(அதாவது தமிங்லீசு) ஏன் இப்படி சிலோன்காரன் மாதிரி தமிழ்லியே பேசுறீங்க?”. */

    அது சரி :) ))

    அன்புடன்
    வெற்றி.

  5. குழலி / Kuzhali சொல்வதென்னவென்றால்:

    நட்சத்திர வாழ்த்துகள்… சுவையா எழுதியிருக்கிங்க…

  6. பெருசு சொல்வதென்னவென்றால்:

    ரெம்ப நன்றிப்பா சந்தோசு

    அப்பப்ப வந்துட்டு போங்க

மறுமொழி இடுக