உடன்பிறப்பே இலவச தொலைக்காட்சிப்பெட்டிகள் வழங்கப்பட்டதே நம் கண்மணிகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை கண்டு மகிழ வேண்டுமென்ற ஆவலால்தான்.
நம் வீட்டுப் பெண்டிரும் குழந்தைகளும் அக்கம்பக்கத்தாரை அவர்கள் நடுஇரவு மசாலா பார்த்து களிக்கும்வேளையில் சிவபூசைக்கரடியாய் உள்நுழைந்து லாவணி பாடவைக்க வேண்டாமென்ற நப்பாசையால்தான்.
அகில இந்திய அணியின் தலைமைக்கு ஒரு திராவிடன் தான் தலைமை தாங்க வேண்டும் என்று முற்போக்கு கூட்டணியின் சார்பாக மடலிட்டு, அதனை நிறைவேற்றியும் தந்த நடுவண் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் எமது உள்துறை அமைச்சகத்தின் மூலமாக மாவட்டம்தோறும் கலைநிகழ்ச்சிகளும், ஊராட்சிகள்தோறும் கிட்டிப்புள் ஆட்டங்களும் நடாத்திட, அரசாணை இன்றே கையொப்பமிட கோப்புகள் தயாராகி வரும் இந்த வேளையில்,
நமது கிராமத்து விளையாட்டான கிட்டிப்புள், இன்று கடல் கடந்து கிரிக்கெட் என்ற பெயரிலே ஆங்கிலேயர்கள் விளையாடினாலும், நம் கிராமிய கலைகள் கிராமி அவார்டு வாங்காவிட்டாலும்,
மட்கிபோகக்கூடாதென்ற ஒரே காரணததால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளினூடே இடைவேளை நேரத்தில் கிட்டிப்புள் காட்சிப்போட்டிகள் நடத்திக்காட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததை, ஏதோ நம் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி தமது சகாக்களுடன் சென்று, கிட்டிப்புள் விளையாடி வீரம் காட்டி விடுவாரோ என்ற அச்சத்தாலும், இலவசமாக வழங்கப்பட்ட தொலைக்காட்சிகளில் எதிர்க்கட்சி அணித்தலைவர்களின் முகம் தெரியாது என்று பொய்யுரைத்திட்டு, அப்புகழை பாழ்படுத்தி,மக்களை திசை திருப்ப எதையோ நினைத்து எதை யோ இடித்த கதையை நமக்கு நினைவுபடுத்திய அம்மையாரின் ஒரு நாள் உண்ணாவிரதக்களியாட்டங்கள்,எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனை இடர்களையும் நெருஞ்சி முட்களாய் தேய்த்தெரிந்திட்டு,நாம் நடந்த பாதைகள்தான் எத்தனை,போராட்டக்களங்கள் எத்தனை,கண்துய்யாது விழித்திருந்த நாட்கள்தான் எத்தனை, இப்படி எத்தனை எத்தன்கள் குறிக்கிட்டாலும் தடைகளனைத்தும் தகர்த்தெரிந்து தம்பி வா, தயங்காது வா.
கட்சியின் பெயரில் திராவிடத்தைக்கொண்டு புற்றீசல் போல் புதுக்கட்சிகள் முளைத்தாலும்,அவ்’விடங்’களையெல்லாம் வெற்றி கொண்டு, திராவிட ரத்தத்தையும் பெயரையும் அகத்தையும் தன்னகத்தே வைத்துள்ள தென்னகத்து சிங்கமே, திராவிடனே, புறப்படடா தம்பி,போர் முரசு கொட்டடா, கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனென்ற கம்பனின் கட்டுத்தறியாய், கட்டவிழ்த்த காளையாய் செல்லடா என் தங்கமே, வெற்றியும் தோல்வியும் போர்வீரனுக்கு இயல்பென்றாலும், இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருகிறதடா என் கண்மணி.
இப்பொழுதெல்லாம் சமர்கள் நான்கு சுவர்களுக்குள் முடிவெடுக்கப்படுகின்றதென்றாலும் தோல்விகளை தாங்கக்கூடிய தோள்திறன் உங்களைப்போன்ற இளங்காளைகளிடமுண்டென்றாலும், வாழ்வா சாவா என்ற நிலை நமக்கின்று.
ப்பூவென்று ஊதினால் சருகும் பறந்து செல்லும் தூரத்திலுள்ள இலங்கையினரை ப்ப்ப்பூவென்று ஊதி வெற்றி கொள்ள வேண்டுமடா செல்வனே!.
நீ கேட்ட அனைத்து தளவாடங்களையும் உனக்களிக்க ஏறபாடு செய்துள்ளோமே. எதிரணியினர் கூலிப்படை வைத்துள்ளார் என்றாய், கங்”கூலி”யையும் உனக்களித்தோம். கடல் கடந்து செல்ல வேண்டுமென்றாய், “தோணி” யையும் துணைக்கழைத்தோம்.இது கள்ளத்தோணி அல்ல.யாரையோ நினைவுபடுத்தினால் நாம் பொறுப்பல்ல.
சேவை புரிய “சேவா” க்கையும் இலவசமாயளித்தோம். கேரளத்து சின்னக்குயில்களையும், பைங்கிளிகளையும் சேடிகளாய் துணைக்கு அனுப்ப முடியவில்லையென்றாலும், அவர்களின் சின்ன சேட்டன் “சிரிசாந்து”வையும் துள்ளி விளையாட உன்னோடு சேர்த்தோம்.
உருவத்தில் சின்னவனாக இருந்தாலும் பெயரிலே பத்தையும் உள்ள”டக்”கிய டெண்டுல்கரையும் தட்டிக்கொடுத்து அனுப்பினோம்.
வயதிலே பெரியவன், இனமானச்சிங்கம் சாளுக்கிய வம்சா வழியாம் அணில் “கும்”ளே வும் உன்னுடந்தானே.
அதோ, கம்பீரமாய் நடைபயிலும் கம்பீரையும், சரவண பவன் உணவகத்தை நினைவு படுத்தினாலும், படுத்தாத ராபின் ஊத்தப்பாவையும், ராசபுத்திரனோ என்று கண்டோர் வியக்கும் யுவராசு சிங்கும், கைப்பும், ரைய்னாவும் அடடா , அடடா என்னே அழகு. உன் படை.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
காட்டுக்கு சென்ற அண்ணனின் பாடம் பற்றி பின் நடந்த இலக்குவனின் பேர் போற்றும் வி.வி.எஸ் இப்போது ஓடிப்பழகுகிறானாம்.
ஆயிரம்தான் ஆனாலும் நம் வீட்டு மாப்பிள்ளைகளை நாம் மறக்கக்கூடாது.நான் நம் வீட்டு மலரை மணந்த முத்தையனை சொல்கிறேன்.ஆனால் விதி கொடியது, அவன் இருப்பதோ எதிர் முகாமில்.
ஜெயசூரியன், தவறாமல் திருப்பதி வந்து செல்பவன். நம் சின்னத்தில் சிறிதே அவன் பெயரில் இருந்தாலும்,முதல் பாதியை உச்சரிக்க முடியுமா நம்மால்.
1952ல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆங்கிலேயர்களை சென்னையில் பூண்டோடு வென்றோமே ,அப்போழுதெல்லாம் நீ இருக்கவில்லையடா , ரஞ்சித்சிங்காரும் துலிப்சிங்காரும் சிங்காரமாய் கட்டிக்காத்த இப்போர்க்களங்கள் நீ பாடத்தில் மட்டுமே படித்திருப்பாய்.
1983ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நாம்தான் வென்றோம். அந்த அணிக்கு தலைமை தாங்கியவன் தன்மானத்தமிழன். அப்போதெல்லாம் நீ பால் மணம் மாறா பச்சிளம்பாலகன்.டென்னிஸ் பால் வைத்து , சுவற்றிலே மூன்று கோடுகளை வரைந்திட்டு, தென்னை மட்டை வைத்து ஆடிப்பழகிய காலம் அது.
கட்சிப்பணிகளும் அரசுப்பணிகளும் பின்னழைத்தாலும், பள்ளித்தேர்வுகளும் கல்லூரித்தேர்வுகளும் காத்திருந்தாலும், கப் வெல்வது அல்லவா, முக்கியம் நமக்கு.
மீண்டும் சொல்கிறேன், மீண்டு வா, மீட்டெடுத்து வா.
எதிர் கொள்ள இருப்பது போர்வாளேந்திய சிங்க இலச்சினயை கொடியிலே பதித்த இலங்கை அணி.
பெர்முடா அணியை வெற்றி கொண்டதில் ஆறாயிரம் கோடி மிச்சமாம்.எக்காளமிட்டு எழுதுகின்றன் இன்றைய தினசரிகள்.
மிச்சமெல்லாம் மிலேச்சர்களின் எச்சம். நிதியா முக்கியம் நமக்கு.
இறுதிப்போட்டிக்கு சென்றடைந்தால் தனி விமானத்தில் மேற்கு இந்தியாவுக்கு அழைத்துச்செல்கிறேன் என்று வாக்கு குடுத்திருக்கிறேன் அமைச்சரவையில். இடமிருந்தால் எல்லா நிதிகளையும் கொண்டு வந்து சேர்க்கிறேன்.
போற்றுவார் போற்றட்டும்! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்!.
கவலைப்படாதே, வெற்றி நமதே.










12:58 பிற்பகல் இல் மார்ச் 21, 2007
நைய்யாண்டி தூக்கல். கலைஞரின் கடிதம் பாணியில் எழுதப்பட்டிருப்பது நன்று.
9:25 பிற்பகல் இல் மார்ச் 21, 2007
கலக்குறீங்க பெருசு. நல்லா இருந்திச்சு. ஆனா டீமில் இல்லாத ஆளுங்களையும் சேர்துக்கிடீங்களே.
11:47 பிற்பகல் இல் மார்ச் 21, 2007
வாங்க ராசுக்குட்டி
வருகைக்கும் நன்றி.
சும்மா முயற்ச்சி செய்து பார்த்தேன்.
11:48 பிற்பகல் இல் மார்ச் 21, 2007
என்னங்க இது
நால்ரோடு,வித்தியாசமா இருக்குதுங்க உங்க பேரு.
அப்படியே எழுதும்போது வர்ரதாங்க பேரு.ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு எழுதறது இல்லீங்க.
11:50 பிற்பகல் இல் மார்ச் 21, 2007
இது எந்த ஊர் நால்ரோடு சாமி.
கொஞ்சம் விளக்கம் போடுங்களேன்.