அம்மா அப்பா விளையாட்டு

சிறு வயதில் அக்கம்பக்கத்து சிறார்களுடன் ,சிற்சில சமயங்களில் பெரியவர்களின் துணையுடன் தத்தம் தாய்தந்தையரை நினைவில் கொண்டு அவர்களைப் போலவே கற்பனையாக பலப்பல செயல்களை
நினைவுபடுத்தி விளையாடியிருப்போம்.

ஆனால் ஒரு பருவத்தை கடந்த பின் அந்த விளையாட்டுகளை நினைவு கூர்ந்தால் சிறுபிள்ளைத்தனமாகத்தானே தோன்றுகிறது.யாராவது,
உங்கள் குழந்தைகள் இக்காலத்தில் இவ்விளையாட்டை ஆடுவதுண்டா,இல்லை சொல்லிக்கொடுக்கும் மனப்பான்மை நம்மில் எத்துணை பேருக்கு இருக்கிறது.

ஆனாலும் காலங்கள் மாறி விட்டது.எனவே குழந்தைகளுக்கு விளையாட்டைப்பற்றியும் அவற்றின் இன்றியமையைப்பற்றியும் பேசுவபர் எத்துணைபேர்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் எந்த அளவுக்கு நமது கல்வியகங்களில் வழங்கப்படுகிறது. அப்படியே வழங்கப்பட்டாலும் அது எந்த அளவில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது.விளையாட்டுக்கல்விக்கு முக்கியத்துவம் நமது கல்வித்திட்டங்களில் வகுக்கப்படவே இல்லை.

வளரும் பிள்ளைகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தின் நன்மையை போதிப்பதில் முன்னோடியாய் இருப்பதில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பெற்றோர்கள் பின்னோடியாய் இருக்கிறோம்.

ஏனென்றால் நாம் கற்ற கல்வி அவ்வாறு, நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது அவ்வாறு,படிக்கவில்லை என்றால் எதிர்காலம் கிடையாது. எட்டாம் வகுப்புக்கு பின் இந்தப்பிரச்சினை தலைதூக்க ஆரம்பிக்கும்.
படிப்பில் இவ்வளவு சதம் எடுக்கவில்லை என்றால் உனக்கு அந்தப்படிப்பு கிடையாது. பின் எதிர்காலம் இருண்டுவிடும். பின் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டும்,என்றெல்லாம் பயமுறுத்தி உண்மையாகவே அக்குழந்தைக்கு படிப்பு மட்டுமே முதல்,விளையாட்டு எல்லாம் தேவை இல்லாத ஒன்று என்ற மனப்பான்மை வந்து விடுகிறது.

ஆனால் அந்த ஆசைகளை எல்லாம் உள்மனத்தில் குழிதோண்டி புதைத்து விட்டு படிப்பு, படிப்பு பின் மேலும் படிப்பு,ஒன்றொன்றாக கடந்தபின் வேலை தேடும் படலம்.வேலை கிடைத்தபின் அதில் நிலைக்க வேண்டிய கட்டாயம், நிலைத்தபின் பதவி உயர்வு, வெளிநாட்டுப்பயணம், ஓரிரு ஆண்டுகளில்
தாய்தந்தையரை மேலும் மகிழ்வு செய்ய திருமணம், திருமணமாகி சில ஆண்டுகளில் பெற்றோராகி விட்டு தமது பெற்றோர் தொடர கொடுத்த அதே
அம்மா அப்பா விளையாட்டை விளையாட ஆயத்தம் ஆகி விடுகிறோம்.

இதில் நம் குழந்தை டேவிக் பெக்காம் அல்லது ரோனால்தின்யோ ஆக முடியாதா, ஒரு ரஃபேல் நாடால் அல்லது ரோஜர் பெடரர் ஆக முடியாதா, என்ற ஏக்கம் நம்மில் பல பேருக்கு இருந்தாலும் அம்மா அப்பா விளையாட்டில் அதன் தாக்கம் மறைந்து விடுகிறது.

நூறு கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில், உலகத்தரம் கொண்ட கால்பந்து அணியை உருவாக்க ஏன் முடியவில்லை. ஆசிய அளவிலே போட்டியிடும் கூடைப்பந்து அணி ஏன் உருவாக்க முடியவில்லை.

ஹாக்கி ஹாக்கி என்றொரு விளையாட்டு நம் நாட்டில் இருந்தது,செல்லுமிடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டி வந்த அந்த விளையாட்டின் சமாதியில் இன்று புல் முளைத்து விட்டது. எத்தனையோ தயான் சந்த்கள்(ஜெர்மனியில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது) நாட்டில் மூலை முடுக்குகளில் இருப்பினும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லையே.

அரசாங்கம் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் எத்தனையோ வெளிநாட்டுஉள்நாட்டு நிறுவனங்கள் ஏன் மற்றெந்த விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமோ அல்லது ஆதரவோ அளிப்பதில்லை. விளையாட்டை விளையாட்டாய் மட்டும் கவனிக்காமல் ஏனிந்த பாரபட்ச
அரசியல் அணுகுமுறைகள்.ஒரே ஒரு விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை.

காரணம் மக்கள்,ஆம் மக்களேதான், ஒரு உணவகத்தில் சாப்பாடோ அல்லது அணுகுமுறையோ அல்லது கவனிப்போ சரியில்லை என்றால் அடுத்தமுறை வேறோரு உணவகத்தை நாடிச் செல்கிறோம்.

அடித்து விரட்டினாலும், சுவையிலும் கவனிப்பிலும் உபசரிப்பிலும் அணுகுமுறையிலும் எத்தனைதான் காரமிருந்தாலும் கசப்பிருந்தாலும் மீண்டும் அதே உணவகத்துக்கு சென்றால், தான் என்ற இறுமாப்பு அவ்வுணவகத்துக்கு வந்து விடுகிறது. யாரும் போகவில்லை என்றால் ஒன்று இழுத்து மூட வேண்டியதுதான், இல்லையென்றால் வேறிடம் தேடியோட வேண்டியதுதான்.

இப்படித்தான் மக்களின் அணுகுமுறையும் ஒவ்வொரு விளையாட்டின் பாலிலும் மாறாத வரை அவ்விளையாட்டுகள் வளம் பெறப்போவதில்லை.
இந்தியாவும் உலக விளையாட்டரங்கில் விலை போகப்போவதில்லை.

அதுவரை அம்மா அப்பா விளையாட்டு விளையாடிக்கொண்டிருபோம், உண்மையாகவே.

மறுமொழி இடுக