இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

மே 14, 2007

எந்தப்படத்துலே எந்தப்புண்ணியவான் எழுதிய வசனம்யா இது.இப்ப நாடு இருக்குற நெலமையிலே நம்ம ஆட்சிலே இருக்குறவங்க சொல்லாம சொல்லுற வசனமய்யா இது.

ஆட்சி முறை மாறுகிற வரை ஆட்சியாளர்கள் மாற மாட்டார்கள். எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவை உதாரணம் காட்டும் புண்ணியகோடிகளையும் ரஷ்யாவையும் , கூபாவை இழுக்கும் தனவான்களையும் குற்றம் கூறி பயனில்லை.

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் உண்டு என்று கூறியது எந்தவொரு கணத்தில், அந்த அர்த்தத்தை அனர்த்தமாக்கி மாற்றான் தோட்டத்து மல்லிகையை
கவர்ந்து கொண்டு வந்து,அடிமை சாசனம் எழுதி கோடிகளில் குளிக்கும் கோமான்களின் சித்து விளையாட்டுகளின் பலியாடுகளில் அவர்களின் குடும்பங்களும் விதிவிலக்கல்ல.
(கஞ்சா கற்றுக்குட்டிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பேற்க மாட்டேன்).

ஆட்சியை ஏனய்யா ஒரே ஆளும் ஒரே குடும்பமும் நடத்த வேண்டும், இதென்ன மன்னர் ஆட்சி முறையா. அதைத்தான் அம்பேத்கரும் வல்லபாய் படேலும் ஒழித்து விட்டு மக்களாட்சியை புகுத்தி பன்னெடுங்காலமாகி விட்டதே.

முதல்குடிமகனின் பேச்சு வெறும் சுரைக்காய்க்குதானோ. நாட்டில் இரு கட்சி கொள்கைக்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனைனில் வருமானம் கிடையாதே.

கவரிமானின் பரம்பரைகள் வாரிக்கொண்டு போக வாரியம் கிடைக்கவில்லை என்றால் ஒரு கட்சியும், கூடவே கூத்தடிக்க கோவேறு கழுதைகளும் வெளியேறும். சீட்டுக்கட்டு கோபுர வஸ்து ராஜாக்களுக்கும், அரிதார மங்கைகளுக்கும் கிடைத்த,
கிடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் படித்த திறமைக்கும், பாட்டாளிகளுக்கும் கிடைப்பதில்லையே இத்திருநாட்டில்.

நாமெல்லாம் செத்தபின்னும், சனிக்கிழமை சனிபகவானுக்கும் பயன்படுத்தும் ஒரு பொருள் எள், இப்பொருளை பெட்டி பெட்டியாய் வாங்கி வந்த இரஷ்யா, இந்தியாவின் தரம் சரி இல்லை என்று கொள்முதலை நிறுத்தி விட்டது. இதனைப்பற்றி எந்த ஒரு ஊடகத்திலாவது முதலைக்கண்ணீராவது வடித்தனரா , இல்லை ஒரு கருத்துக்கணிப்புதான் நடத்தினரா.

வரும் 2008ல் பக்கத்து நாடான சைனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ள எத்துனை P.T.உஷாக்கள் தயார்படுத்தியுள்ளனர். அனைத்து ஊடகங்களும் இதன் பக்கமே தலை வைத்துப்படுப்பதில்லை. கருத்துக்கணிப்புதான் நடக்குமா.

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்த காரணத்தால், கடன்களின் மீது வட்டி விகிதம் உயர்ந்த காரணத்தால் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் லாபமிழந்த வியாபாரிகள் எத்தனை பேர் என்ற கருத்துக்கணிப்பு நடந்ததா.

ஏறி வந்த ஏணிப்படியை எட்டி உதைத்து எக்காளமிட்ட
எத்தர்களின் கதையை எத்தனை பிரச்சாரங்களில் கேட்டு
விட்டோம். நான் ஏணியென்று குறிப்பிடுவது ஏமாளி மக்களையும் எத்தர்களென்று கூறுவது யாரென்றும் உங்களுக்கே தெரியும்.

அரசியலில் நாடகங்கள் இயல்பென்றாலும் சிலப்போது
அவை கூத்துகள் ஆகி பார்வையாளர்களை முட்டாளாக்கி
விடுவதுமுண்டு.

கணக்கு கேட்டவனை கூத்தாடி என்றும், வேற்று தேசத்தானென்றும் வசை பாடியதை இந்நாடறியும்.

பங்கு கேட்ட உடன்பிறவாத்தம்பியை கொலைக்கழுவிலேற்றி, பின் மன்னிப்பது போல் ஆரத்தழுவி மற்றுமொரு முறை முதுகில் தட்டுவது போல் துரோகி பட்டமளித்து நம்மையில்லாம் இ.வா. செய்யத்தும் இக்கூத்துகளில் ஒன்றுதான்..

மீண்டுமொரு முறை நாடகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை குடும்பமே நடிக்கிறது.
முடிவு யார் கையில். கைக்கோளிட்டு காட்ட ஒரு புதுத்தலைப்பு கிடைத்துவிட்டது.

என்மகன், முதல்வன், உறவைக்காத்த கிளி,பாசப்பறவைகள், இதெல்லாம் பழைய மொந்தை.

புதுக்கள் புது மொந்தை தயாராகிறது.
எனக்கும் ஆட்டோ வ்ருகிறது.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது டமிளாக இருக்கட்டும்.


மாறன் செய்தது சரியே

மே 12, 2007

மாறன் மந்திரி மட்டுமில்லீங்க. அவுரு ராஜ பரம்பரைங்க.
அப்படி என்னதான் செஞ்சுட்டாரு அவுரு. கொலையா செஞ்சுட்டாரு.
போராட்டத்துலே அவுங்க தாத்தா செய்யாததா.

தாத்தா எவ்வளவு பெரிய தாதா தெரியுமா.அவுரோட ஆட்சிலே என்னென்ன
நடந்தது தெரியுமா.வரலாறு தெரியுமா உங்களுக்கு.

மாறனோட அப்பா ரொம்ப உக்கிரமானவரு.மாறனோட தாத்தா பேரு என்னன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா.

மாறனோட தாத்தா பேரு தலையானங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்.சந்தேகமா இருந்தா இங்க போயி பாத்துக்கங்க.

தமிழ்நாட்டு அரசியல் சும்மா தூள் பறக்குதுங்க.
மக்கள் மூடை மாத்தாலாமின்னு சும்மா ஒரு மொக்க போட்டுப்பாத்தேன். ஹி ஹி.தலைப்பு சும்மா உங்களை உள்ள கூப்புடறதுக்கு.


அன்பு உடன் பிறப்பே

மே 10, 2007

முரசொலியின் முதல் பக்கத்தில் இப்படித்தன் இருக்கும் இன்று.

அன்பு உடன் பிறப்பே

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். .கழகத்தில் பல கலைகளையும் கற்றதுஎமது குடும்பம்.இக்குடும்பத்தில் நீயே உயிர்த்தூண்.
வேண்டாமடா கண்மணிகளே! கண்ணாடி வீட்டிற்குளிருந்து கல்லெறிய வேண்டாம். ஒரே குடும்பமாகிய எமது கழகத்தில் கலகமுண்டாக்க வேண்டுமென்று எதிர்க்கட்சி கூடாரத்தில் உருவாக்கிய சதித்திட்டத்தை முறியடிக்க எனதன்பு மாறன் இல்லாமல் போய் விட்டான். உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்கவாமுடியும், பின் இக்கோட்டான்களின்
கொட்டம் இன்னமும் அதிகமாகி விடுமே. விடும் விடுமென தோள் தட்டி போர் முரசு கொட்டவேண்டிய நேரமல்ல இது.புலி பதுங்குவது பாய்வதற்கேயன்றி ஓணான்களுடன் பாய் விரித்து படுப்பதற்கல்ல.
போய்யா போவென்று பதவி கூறுகிறது.வாய்யா வாவென்று காடு அழைக்கிறது. இதற்கிடையில் நம் பாசப்பறவைகளின் உரசல் கழகத்தை கிடையில் தள்ளிப் பார்க்கிறது. கத்தியை தீட்டாதே ! புத்தியை தீட்டென்றனறு எனதருமை அண்ணா கூறினானே! நினைவிருக்கிறதா உனக்கு..
பொன்விழாக்கொண்டாத்திலே பசுத்தோல் போர்த்திய நரிகள் உலா வருகின்றன. அவற்றை கண்டெடுத்து பல் பிடுங்கும் கடமையும் வீரமும் உனக்கில்லையா. கைதட்டி ஆடிப்பாட வேண்டிய இந்நேரத்திலே நயவஞ்சகர்கள் கைகொட்டி சிரிக்க,ஆர்ப்பரிக்க காரணமென்ன கண்மணி.
திரும்பிப்பார்! நாம் கடந்து வந்த போர்க்களங்கள் எத்துணை, வாங்கிய விழுப்புண்கள்தான் எத்துணை. வளத்தகடா மார்பில் பாய்ந்த கதையை நீயும் படித்திருப்பாய், அதன் விளைவுகள்தான் என்னவென்று ஒருகணம் சிந்திந்துப்பார். எள்ளி நகையாடுவோர்,நிந்திப்போர் சுற்றியிருக்க,
சொந்த வீட்டில் கன்னம் வைக்க மனது கொள்ள வேண்டாமடா செல்வனே.
என்னை கொல்லாமல் கொல்கிறது இப்பித்தலாட்டக்காரர்களின் அம்புகள்.
மகாபாரதப்போரில் பிதாமகர் அம்புப்படுக்கையில் வீற்றிருந்து வரம் கேட்டார். நான் உங்கள் அன்புப்படுக்கையிருந்து கேட்கிறேன் வரம்.
அமைதி காத்தருளுங்கள்! வெற்றி நமதே.

அண்ணா நாமம் வாழ்க.